கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணி வரலாற்று முக்கியத்துவம் மிக்க தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. மல்லிகார்ஜுன மலை பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான பானைகள், சமையல் பயன்பாட்டு பொருட்கள், கலைச் சான்றுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த பகுதியில் பழங்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரூ எம் பாயர், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஜி. ஜோஹன்சன், மற்றும் டெல்லி-என்சிஆரின் ஷிவ் நாடார் பல்கலைக்கழக பேராசிரியர் ஹேமந்த் கடம்பி ஆகியோர் தலைமையிலான பன்னாட்டு குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, கனடா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த அகழ்வாராய்ச்சி மஸ்கியின் மல்லிகார்ஜுன கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 271 இடங்களில் அகழ்வாய்வு நடைபெறுவதுடன், கிபி 11ம் நூற்றாண்டுக்கும் 14ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்றுச் சான்றுகளும் இதில் வெளியாகியுள்ளது.
இவற்றில் முக்கியமாக, பழங்கால மண் பானைகள், சமையல் பயன்பாட்டு பொருட்கள், மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை அடங்கும். இதுபற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் ஹேமந்த் கடம்பி, “மஸ்கி பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் மனித குடியேற்றம் இருந்ததற்கான வலுவான ஆதாரங்களை கண்டறிந்துள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள், இந்தியாவின் பழங்கால வரலாற்றை மேலும் விளக்கிக்கொடுக்கின்றன. மஸ்கி பகுதி, இதன் மூலம் ஒரு புதிய பழமையான நாகரிகத்தின் தடயமாக உருவெடுக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளது.
Read more: முடிவுக்கு வரும் பாமக மோதல்..? அன்புமணி தலைமையிலான போராட்டத்திற்கு ராமதாஸ் வாழ்த்து..!!