தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினி படம் என்றாலே கட்டாயம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் தான் தனது 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல, ரஜினிகாந்த் சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அப்படி ரஜினியின் திரை வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த படங்களில் பாபா படமும் ஒன்று. 2002-ம் ஆண்டு வெளியான படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய ரஜினி தனது லோட்டஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுஜாதா, நம்பியார், கவுண்டமணி, அம்ரிஷ் பூரி, ஆசிஷ் வித்யார்த்தி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக இது மாறியது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ரஜினிகாந்த் இழப்பீடு வழங்கினார்.
இந்த நிலையில் பாபா படத்தால் தமிழ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் தனது மார்க்கெட்டை இழந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா பேசி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர் “ பாபா, தமிழில் எனது கடைசி படம். தென்னிந்தியாவின் கடைசி படமாகவும் அது அமைந்தது. அந்த படம் படு தோல்வி அடைந்தது.. மேலும் அந்த படம் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்ததால் என் கெரியர் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.. அது தான் நடந்தது. பாபா படத்திற்கு முன் நான் தென்னிந்திய மொழிகளில் பல நல்ல படங்களில் நடித்தேன்.. ஆனால் பாபா தோல்விக்கு பின்னர், எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை..” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தனுஷின் குபேரா ரசிகர்களை கவர்ந்ததா? சொதப்பியதா? பிளாக்பஸ்டராக மாறுமா? ட்விட்டர் விமர்சனம் இதோ..