சிறையில் இருந்து வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட 55 வயது ஆயுள் தண்டனை கைதியை, காதலியுடன் ஓட்டலில் தங்குவதற்கு அனுமதித்த 3 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பச்சாகான் (55). இவர் இர்பான் கான் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றொரு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக குற்றவாளி பச்சாகானை 3 போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்து அழைத்து வந்த போது பச்சாகானின் ஆதரவாளர்கள் கொடுத்த கையூட்டை பெற்றுக் கொண்டு உப்பள்ளி- தார்வார் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவரது காதலியை பார்ப்பதற்கு கைதி பச்சாகானை அனுமதித்துள்ளனர்.

ஓட்டல் அறையில் பச்சாகான் காதலியை சந்தித்த நிலையில், 3 போலீசாரும் வாகனத்துடன் ஓட்டலுக்கு வெளியே காவல் காத்துக் கொண்டிருந்தனர். உளவு பிரிவு போலீசார் மூலம் இந்த தகவல் மாநகர காவல் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஓட்டலில் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு அறையில் காதலியுடன் பதுங்கியிருந்த பச்சாகானை தட்டி தூக்கிய போலீசார், காதலியை சந்திக்க அனுமதித்த 3 பாதுகாப்பு காவலர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து 3 காவலர்கள், பச்சாக்கான், அவரது காதலி ஆகிய 5 பேரையும் பல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். பந்தோபஸ்துக்கு போன இடத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு பாதை தவறியதால் 3 போலீசாரும் பச்சாக்கானுடன் சேர்ந்து கம்பி எண்ணி வருகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.