உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். இவர், பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுக்கு சனா என்ற பெண் வாடகைக்கு குடிவந்துள்ளார். அவர் அதே வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தார். அப்போது சோனலுக்கும், சனாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். பின்னர், மிகவும் நெருக்கமாக பழகுவதை அறிந்த சோனாலின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் விரும்புவதை ஏற்காததால், சனாவை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்தனர். இதையடுத்து, சனா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சனாவுடன் தான் வாழ்வேன் என்று கூறிவிட்டு சோனாலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்வது என முடிவு செய்தனர்.
இதனால், சனா பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜூன் 22, 2020 அன்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆணாக மாறிய அவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஹோகைல் கான் என மாற்றிக் கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, ஹோகைல் கானின் மனைவியாக அனைத்து மருத்துவ ஆவணங்களிலும் சோனால் கையெழுத்திட்டார். சனா ஏற்கனவே ஒரு அரசாங்க வேலையில் இருந்ததால் சோனலும் ஒரு அரசு வேலையை விரும்பினார். 2022இல், சோனல் யதர்த் மருத்துவமனையில் வேலை பெற்றார். இருப்பினும், சோனாலின் நடத்தையில் சனா ஒரு மாற்றத்தை கண்டார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்த கியான் என்பவருடன் சோனாலுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சோனாலுக்கும், சனாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் சோனால், தனக்காக ஆணாக மாறிய சனாவை விட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் கியானுடன் வாழ விரும்புவதாக சனாவிடம் சோனால் கூறியுள்ளார். மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் அளித்த புகாரில், சனா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம் சனா தனக்கு நடந்த கொடுமைகளை போலீசாரிடம் விவரித்தார். இந்த நிலையில், சோனாலை கடந்த ஜனவரி 18ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். எனினும் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.