புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார கட்டணம் உயர்த்துவதோடு விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும். மின்துறை தனியார் மையம் என்பது கொள்கை முடிவு என்று துணைநிலை ஆளுநர் குறிப்பிடுகிறார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கொள்கை முடிவு ஏற்கப்படும் ஒன்றாகும்.

மின்துறை தனியார் மாயமாக்குவது சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசு என்பது மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவே தவிர, மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல. மின்துறை தனியார் மையம் டெண்டரை நிறுத்தி வைத்து விட்டு, மக்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

தனியார் மயத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் எச்சரித்துள்ளார். மேலும், துணை ராணுவத்தை புதுச்சேரியில் இறக்கியும் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மக்கள் விரோத திட்டங்கள் திணிக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி துணை போகிறார். மின்துறை தனியார் மையமாக்கினால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல கூட தயாராக உள்ளோம். பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். வேஷம் போட்டுக்கொண்டு, அமைச்சர்கள் நடிக்கிறார்கள். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைத்தது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்”. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.