தனியார் மருத்துவமனையில் பெண்கள் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்படும் உடையை அணிந்து வரும்படி கூறியுள்ளனர். இதனால், அந்த பெண் உடை மாற்றும் அறைக்கு சென்று உடையை மாற்ற முயற்சித்துள்ளார். அப்போது, அந்த அறையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்துள்ளது. இதனால், அவர் அந்த அறையை சுற்றி பார்த்தபோது அங்கு செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த செல்போனை கைப்பற்றி விசாரித்தபோது, அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பவன் குமார் (21) என்ற ஊழியருடையது என்பது தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பவன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பவன் குமார் இதேபோன்று பல பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பவன் குமாரை கைது செய்த போலீசார், மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.