கடந்த 50 ஆண்டுகளாக டீ, ஹார்லிக்ஸ், ஜூஸ் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு, மூதாட்டி ஒருவர் உயிர்வாழ்ந்து வருகிறார்.
உலகம் முழுவதும் மனிதர்கள் பார்க்க ஒன்றுபோல இருந்தாலும் பலர் பல விதங்களில் மாறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். பலருக்கு பல உணவுகள் அலர்ஜியாக இருப்பதால், வாழ்நாள் முழுவதும் அப்படியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு பாட்டி அலர்ஜியால் அல்ல தன் வைராக்கியத்தால் உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..?

மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்தவர் தான் அந்த 76 வயதான அனிமா சக்ரபூர்த்தி பாட்டி. இவர் இதுவரை சாதம், சப்பாத்தி, டிபன் ஐட்டங்கள் போன்ற திட உணவுகளையே எடுத்துக் கொண்டதில்லையாம். காலை ஒரு டீ, மதியம் ஒரு ஹார்லிக்ஸ், மாலை ஒரு ஜூஸ் என திரவங்களை மட்டுமே குடித்து வருகிறார். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாகவே பாட்டி இப்படியாகதான் சாப்பிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பாட்டி கூறுகையில், சிறுவயதில் தனது தாய் சந்தித்த வறுமையின் காரணமாக அப்போது திரவ உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த பாட்டி பின்னர் அதையே தனது வாழ்நாளைக்கான உணவாக மாற்றிக் கொண்டுள்ளார். என்னதான் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டாலும் கூட, பாட்டி இந்த வயதிலும் ஆரோக்கியமாக அனைத்து வேலைகளையும் செய்வது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.