தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவாகரத்து கோரிய கணவரின் மாத சம்பளத்தை பெண் ஒருவர் அறிந்துகொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
‘உங்களது வருமானம் எவ்வளவு’?… பலருக்கும் சங்கடத்தை அளிக்கும் கேள்வி இதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏனென்றால், தங்கள் சொந்த விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் பலரும் தங்களின் வருமானம் குறித்து அவ்வளவு எளிதில் வாய் திறக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். குடும்பத்தினருடன் மட்டுமே பகிர்ந்து கொண்டாலும், திருமண உறவுகளில் பிரச்சனை ஏற்பட்டால், அப்போதும் தங்கள் வருமானம் பற்றி இணையுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். விவகாரத்தின் போது பரஸ்பரம் மணமுறிவு ஏற்படாவிட்டால், மனைவிக்கு உரிய இழப்பீடு உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டியிருக்கும். அப்போது, கணவனின் உண்மையான வருமானம் தெரிந்தால் மட்டுமே அதை வைத்து தனக்கு கிடைக்க வேண்டிய தொகையை மனைவி கேட்டு பெற முடியும்.
ஆனால், இப்படி மனக்கசப்பு ஏற்பட்டு விவகாரத்து வரை சென்றால், கணவன் தனது உண்மையான வருமானத்தை பெரும்பாலும் தெரிவிக்கப்போவது இல்லை. இதனால், தனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற மனைவி போராட வேண்டியிருக்கும். அப்படித்தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கணவனின் வருமானத்தை மனைவி அறிந்து இருக்கிறார். ஆனாலும், எடுத்த எடுப்பிலேயே அவருக்கு இந்த விவரங்கள் கிடைத்துவிடல்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் கணவனின் சம்பளத்தை மனைவி அறிந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தனது கணவனின் வருமானத்தை அறிந்து கொள்ள பெண் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். அவருடைய வருமான வரி தாக்கலின் மூலம் இந்த விவரங்களை அறிய விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது. ஆனால், கணவர் சம்மதம் அளிக்காததால், எந்த விவரங்களையும் அளிக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதையடுத்து, முதல் மேல்முறையீட்டு ஆணையத்திடம் (FAA) அந்தப்பெண் முறையிட்டுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு அதே பதில் வந்துள்ளது.
ஆனாலும், தனது முயற்சியை கைவிடாமல் மத்திய தகவல் ஆணையத்தில் ( CIC) அந்தப்பெண் முறையிட்டுள்ளார். இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், பழைய உத்தரவுகள் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளை ஆய்வு செய்த பின்னர், அந்தப்பெண்ணுடைய கணவரின் வருமான விவரங்களை அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்த 15 நாளில் கணவரின் சம்பள விவரங்கள் மனைவிக்கு வழங்கப்பட இருக்கிறது.