அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து, மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன குடும்பத்தினரை தேடி வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் 4 பேரின் சடலத்தையும் மீட்டனர். இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார். கொலையான குடும்பத்தின் பூர்வீகம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்.