புனேவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கேபிஐடி லிமிடெட் இணைந்து உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பேருந்தினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். பின்னர், உரையாற்றிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஹைட்ரஜன் தொலைநோக்கு’ இயக்கம் துறையில் இந்தியா ஆத்ம நிர்பார் தேசமாக மாறுவதற்கு இது முக்கியமானது. ஹைட்ரஜன் துறையின் வளர்ச்சி புதிய வேலை வாய்ப்புகளையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்” என்றார்.
ஹைட்ரஜன் எரிபொருள் செல் என்றால் என்ன? எரிபொருள் செல்கள் மின்சார வாகனங்களில் காணப்படும் வழக்கமான பேட்டரிகளைப் போலவே செயல்படுகின்றன. ஆனால், அவை சார்ஜ் தீர்ந்துவிடாது மற்றும் மின்சாரம் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. பேருந்தில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரம் வாகனத்தை முன்னோக்கி செலுத்துவதற்கு மின்சார மோட்டார்களால் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் சப்ளை இருக்கும் வரை மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.