வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மாமல்லபுரம், தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 65.41% பங்களிப்பைக் கொண்டுள்ளன என்றும் சுற்றுலா அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரம், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது.
இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 அறிக்கையின்படி, ”2021-22ஆம் ஆண்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு 1,44,984 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். பயணச்சீட்டு அணுகலுடன் மிகவும் பிரபலமான மற்றும் மையமாக பாதுகாக்கப்பட்ட முதல் 10 நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை 45.50% ஆகும். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் 38,922 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது மொத்த பார்வையாளர்களில் 12.21 சதவீதமாகும். மத்தியப் பட்டியலில் உள்ள முதல் 10 நினைவுச் சின்னங்களில் 6 தமிழகத்தில் உள்ளன. அவை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோரக் குக்கிராமமான சாளுவன்குப்பத்தில் உள்ள புலித்தலை, பாறைக் கோயில் மற்றும் இரண்டு நினைவுச் சின்னங்கள், செஞ்சி கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள வட்டக்கோட்டை, திருமயம் கோட்டை, பாறை வெட்டப்பட்ட ஜெயின் கோயில் மற்றும் சித்தன்னவாசல்.
13,598 வெளிநாட்டுப் பார்வையாளர்களைக் கொண்ட ஆக்ரா கோட்டை (உத்திரப் பிரதேசம்), 8,456 பார்வையாளர்களைக் கொண்ட குதுப் மினார் (டெல்லி) மற்றும் 5,579 பார்வையாளர்களைக் கொண்ட செங்கோட்டை (டெல்லி) ஆகியவை பட்டியலில் உள்ள மற்ற நினைவுச்சின்னங்களாகும். 2021 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதல் 5 மாநிலங்கள் தமிழ்நாடு (115.33 மில்லியன்), உத்திரப் பிரதேசம் (109.70 மில்லியன்), ஆந்திரப் பிரதேசம் (93.27 மில்லியன்), கர்நாடகா (81.33 மில்லியன்) மற்றும் மகாராஷ்டிரா (43.56 மில்லியன்) ஆகியவையாகும். “நாட்டின் மொத்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்த 5 மாநிலங்களும் சுமார் 65.41 சதவிகிதம் ஆகும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.