உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பில் 20 வயது மாணவனும் 16 வயது சிறுமியும் படித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால், மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்துள்ளனர். இதை கவனித்த பள்ளி ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.