ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை டெலிவரி செய்து வரும் சொமேட்டோ நிறுவனம், அங்கிதா என்ற பெண்ணை குறிப்பிட்டு ட்வீட் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருக்கிறார்கள். பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றிக் கொள்ள முடியும். இந்த சூழலில் சொமேட்டோ செயலியை முற்றிலும் வித்தியாசமான முறையில் பயன்படுத்தி உள்ளார் போபாலை சேர்ந்த அங்கிதா. அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அங்கிதா என்பவர், தனது முன்னான் காதலனுக்கு சொமேட்டோ செயலியில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இருந்தும் அந்த ஆர்டருக்கான பணத்தை அங்கிதாவின் முன்னாள் காதலன் செலுத்த மறுத்துள்ளார். ஆனால், இதை நிறுத்தாமல் அங்கீதா தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த சூழலில் சொமேட்டோ நிறுவனம் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”போபாலை சேர்ந்த அங்கிதாவுக்கு… தயவு செய்து உங்கள் முன்னாள் காதலருக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் உணவு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களது ஆர்டருக்கு பணம் செலுத்த அவர் மறுக்கிறார். இப்படி நடப்பது இது மூன்றாவது முறையாகும்“ என சொமேட்டோ ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டுக்கு பல்வேறு விதமான கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
‘அங்கிதா சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக மீண்டும் கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்ய முயற்சிக்கிறார். அவரது கணக்கில் அந்த பேமெண்ட் முறை முடக்கப்பட்டுள்ளது. இதை யாரேனும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்’ என சொமேட்டோ ட்வீட் செய்துள்ளது. பயனரின் பெயரை பகிரங்கமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பகிராது. அதை வைத்து பார்க்கும் போது இது சொமேட்டோவின் புரோமோ யுக்திகளில் ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.