உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியாவில் உள்ள ஒரு வயல் வெளியில் 17 வயது சிறுமியின் உடல் ஒன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றி, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ”தனது மகள் காலைக் கடன் கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றதாகவும், வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பாத நிலையில், அவளை தேடி சென்றபோது நிர்வாண நிலையில், சடலமாக கிடந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

காவல்துறை தரப்பு கூறுகையில், “பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் என்ன நடந்தது என்று சொல்ல முடியும். இது குறித்து விசாரணை மேற்கொள்ள 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த குற்றத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.