சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில் பூசாரியாக பணியாற்றி வந்தார். அந்தக் கோயிலுக்கு அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி சாமி தரிசனம் செய்வதற்காக தனியாக வந்துள்ளார். அப்போது, சிறுமியை ஏமாற்றி கோயிலுக்குள் அழைத்த பூசாரி, சிறுமியை பூஜை பொருட்கள் வைக்கும் அறைக்கு கூட்டிச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
உடல் முழுக்க வலியால் துடித்த அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் பூசாரியின் இழி செயல் குறித்து வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கோயில் பூசாரி விபினை அழைத்து விசாரணை செய்ததில், அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனால், கோயில் பூசாரி விபின் மீது வண்டிப்பெரியாறு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பீருமேடு கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.