சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அம்மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.