ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் தாபானைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், தனது கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமி அங்கு உள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதை கேட்டு ரத்த வங்கியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சைல்டுலைனுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். மேலும், சிறுமியிடம் ஏன் ரத்தம் விற்க விரும்புகிறார் என விசாரணை செய்துள்ளனர்.
அப்போது சிறுமி முதலில் தனது படிப்பு செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால், ரத்தம் கொடுக்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் சிறுவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என கூறியதை அடுத்து செல்போன் வாங்கத்தான் ரத்தம் கொடுக்க வந்தேன் என்ற உண்மையை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சிறுமி ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஆர்டர் செய்துள்ளார். இதற்கு சிறுமிக்குப் பணம் தேவைப்பட்டதால், அவர் ரத்தத்தை விற்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்ட பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.