மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் திருட சென்ற திருடன் ஒருவன், திருடுவதற்கு முன்பு கடவுளை வணங்கிவிட்டு பின் திருட்டில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் கிராமத்தில் உள்ள ஜெயின் கோவிலில் திருடன் ஒருவன் பயபக்தியுடன் உள்ளே நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை வணங்கியுள்ளார். அதன் பிறகு, கோவிலில் இருந்த 6 உலோக சிலைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொண்ட உண்டியல் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் திருட்டு தொடர்பான சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அதன்படி, மத்திய பிரதேசத்தின் பாலாகாத் மாவட்டத்தில் உள்ள லம்தா என்ற காவல்நிலைய கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவிலில் வெள்ளி மற்றும் வெண்கலத்தாலான 10 அலங்கார பொருட்களை கொள்ளையடித்த திருடன் மனம் வருத்தி ஒரு செயலை செய்திருந்தான். திருடியதற்காக மன்னிப்பு கடிதத்துடன் கோயிலில் திருடிய பொருட்களையும் மீண்டும் வைத்துவிட்டு சென்றான். திருடனின் அந்த கடிதத்தில் ‘என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் கோயில் பொருட்களை திருடிவிட்டேன். இதனால், பல வகையில் கஷ்டத்தை அனுபவித்துவிட்டேன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தான்.