லாரியிலிருந்து கோதுமை மூட்டைகளை திருடியதாக இளைஞர் ஒருவரை லாரிக்கு முன்பக்கமாக கட்டி 1.5 கி.மீ தூரம் லாரியை ஓட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முக்த்சாருக்கு லாரி ஒன்று கோதுமை லோடை இறக்க வந்திருக்கிறது. அப்போது கடைகளில் இறக்கி வைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளில் இரண்டு மூட்டைகள் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து லாரியின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து ஓட்டுநர் விசாரித்துள்ளார். அந்த இளைஞர் இரண்டு கோதுமை மூட்டைகளை திருடி சென்றதை சிலர் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் ஜெயல் சிங், அந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லாரி ஓட்டுநர் இதனை காதில் வாங்காமல் கடுமையாக தாக்கி கைகால்களை கயிறு கொண்டு கட்டியுள்ளார். பின்னர் அதே லாரியின் முன்புறத்தில் அந்த இளைஞரை சேர்த்து கட்டியுள்ளார். அவரை நன்றாக பிடித்துக்கொள்ள லாரியின் ஓட்டுநரும் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். லாரியை வேறு ஒருவர் இயக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள முக்த்சார் காவல்நிலையத்திற்கு லாரி இயக்கப்பட்டுள்ளது. இந்த 1.5 கி.மீ தூரமும் அந்த இளைஞர் தனது உயிரை கையில் பிடித்தபடி வந்திருக்கிறார். அதேபோல அந்த இளைஞரை லாரியின் ஓனர் ஒரு கையில் பிடித்திருந்திருக்கிறார். இப்படியாக லாரி ஒரு வழியாக காவல் நிலையம் வந்து சேர்ந்துள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், லாரியின் ஓட்டுநர் மீதோ அல்லது ஓனர் மீதோ எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, ஓட்டுநர் மீது காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.