யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே இனி உடனுக்குடன் பார்த்துக் கொள்ளும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வொறு ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே பெற புதிய வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வு, இனி உடனுக்குடன் பெறலாம். இதற்காக UPSC- Official App என்ற பெயரில் புது செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPSC செயலியின் அம்சங்கள் என்ன..?
தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆட்சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம். இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன.