தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாள் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. 2-ம் நாளான நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் மூன்றாம் நாள் சட்டப்பேரவை இன்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார். அப்போது தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் பேரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தாலும் கோபமில்லாமல் சிரித்துக் கொண்டே செல்பவர் நயினார் நாகேந்திரன். அவருக்கு பேரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேரவையில் சிரிப்பலை எழுந்தது.