இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒட்டுமொத்தப் பயனாளிகளுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் எண், முகவரி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற முக்கிய விவரங்களை மாற்றியமைக்க முடியும். இந்தச் சேவைக்காகப் பயனாளிகள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ஆதார் கார்டில் மொபைல் எண் அப்டேட் செய்யும் வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காகவே UIDAI புதிய ‘ஆதார் ஆப்’-ஐக் கொண்டு வந்துள்ளது. இந்தச் செயலி மற்றும் ஆதார் அட்டை இருந்தால் போதும், இனிமேல் ஆதார் மையத்திற்குச் செல்லாமல் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம். மீதமுள்ள முகவரி, பெயர், மின்னஞ்சல் அப்டேட்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளன.
மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி..?
* முதலில், ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பிறகு, அதில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். இந்தப் பதிவுச் செயல்பாட்டை முடிக்க, உங்களது பழைய மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் சரிபார்ப்பு நடக்கும். புதிய நம்பரை மாற்ற வேண்டுமென்றாலும், ஏதேனும் ஒரு நம்பர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம்.
* மொபைல் நம்பர் சரிபார்ப்புக்குப் பிறகு, ஆப்-ன் செல்பீ கேமரா மூலம் உங்களின் கண்கள் மற்றும் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, ‘முக சரிபார்ப்பு’ (Face Authentication) செய்யப்படும். இதன் பிறகு, உங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் ஆப்-ல் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிடும்.
* ஹோம் பக்கத்தில் உள்ள ‘சேவைகள்’ (Services) பிரிவில், ‘மை ஆதார் அப்டேட்’ (My Aadhaar Update) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் காண்பிக்கப்படும் ‘மொபைல் நம்பர் அப்டேட்’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது, ஆதாருடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் காண்பிக்கப்படும். அதன் கீழ் இருக்கும் பெட்டியில், நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். அந்த புதிய எண் சரிபார்க்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை முகச் சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு, அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
* இறுதியாக, பேமெண்ட் பக்கம் திறக்கப்படும். அதில் நீங்கள் ரூ.75 கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பேமெண்ட் வெற்றிகரமாக முடிந்த பிறகு, மொபைல் நம்பர் அப்டேட் செயல்முறை நிறைவடையும். புதிய மொபைல் எண் 30 நாட்களுக்குள் ஆதார் அட்டையில் அப்டேட் செய்யப்படும் என்றும், அதன்பிறகு அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.



