தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின். 25 வயதான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே கேடிசி நகரில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞன் என்பதால் பெண்ணின் தம்பி சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை.. கவினிடம் இது குறித்து பேச வேண்டும் என்று கூறி இரு சக்கர அழைத்து சென்றுள்ளார். கே டி சி நகர் அருகே அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகம் கை கால் என அனைத்து பகுதிகளிலும் பலத்த காயமடைந்த கவின் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக உள்ள நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுர்ஜித் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி ஹேமா சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டார். இதனிடையே கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை (CB-CID)க்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் வேலை.. ரூ.25 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?