விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்: விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், தொழில்முனை வோராகவும், வர்த்தகர்களாகவும் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடை முடியும் என்று தெரிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். மேலும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும் என்றார்.
போலியான விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் தற்சார்பு நிலையை எட்டுவதற்கும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வேளாண் உற்பத்தி அமைப்புகள் உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 24 மாநிலங்கள் மற்றும் 140 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள், பழ வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்ற 267 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.



