தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சியில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தங்களை சந்தித்த அமைச்சர்கள், ஆட்சி அதிகாரிகளாக இல்லாமல் தவெக கட்சி நிர்வாகிகளாகவே சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதித்ததாகவும் அவர் கூறினார். குறிப்பாக மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல்கள், இந்தியா கூட்டணியின் பொறுப்புகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து தங்களின் கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்ததாக வீரபாண்டியன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தவெக அரசுடன் தாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆளுநரின் அதிகார அத்துமீறலை தடுக்கும் நோக்கிலேயே தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், மதச்சார்பின்மையை முழுமையாக நோக்கி நகரும் வரை தவெக செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்போம் என்றும் கூறினார். செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நாளை நடைபெறவுள்ள இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Read More : ஸ்தம்பிக்கும் தமிழகம்..!! 5 நாட்களுக்கு தொடர் போராட்டம்..!! விவசாயிகள் அதிரடி அறிவிப்பு..!!



