மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
“ஈரானுக்கு அளிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் ‘யதார்த்தமற்றவை, நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை’,” என்று அவர் கூறியதாக அல் அரபியா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
15 அம்ச அமைதித் திட்டத்தின் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். பாகிஸ்தான் வழியாக இந்தத் திட்டம் ஈரானுக்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“நாங்கள் அவர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களிடம் தூதர்கள் உள்ளனர், ஆனால் நாங்கள் நேரடியாகவும் பேசி வருகிறோம். ஈரானைப் பொறுத்தவரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது, ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், ஆனால் இறுதியில் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா தரைவழிப் படையெடுப்புக்குத் தயாராகிறதா?
ஈரானுக்கு திராக அமெரிக்க இராணுவம் தரைவழிப் படையெடுப்புகளைத் திட்டமிடுகிறது என்ற ஊகங்களுக்கு மத்தியில், சமாதானத் திட்டத்தை நிராகரிக்கும் ஈரானின் முடிவு வந்துள்ளது. இருப்பினும், இது ஒரு முழு அளவிலான படையெடுப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றும், கார்க் தீவைக் கைப்பற்றுவது மற்றும் ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் திடீர்த் தாக்குதல்கள் நடத்துவது போன்ற வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு டிரம்ப் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.. ஆனால், பாரசீக வளைகுடாவில் ஈரானின் முக்கிய எண்ணெய் வளமாக விளங்கும் கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “உண்மையைச் சொல்லப்போனால், ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், ‘ஏன் இதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்கள்,” என்று டிரம்ப் கூறினார்..
தரைவழிப் படையெடுப்பு குறித்து அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கப் படைகள் “பாரசீக வளைகுடா சுறாக்களுக்கு உணவாகிவிடும்” என்றும் கூறியுள்ளது. பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் அமெரிக்கா தரைவழிப் படையெடுப்பைத் திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் தெரிவித்துள்ளார்.



