தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின் கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது.
அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜூலை 1-ம் தேதி முதல் வரக்கூடிய மின் கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி அனைத்து, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின் கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத்தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று உத்தரவிட்டதை ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை. தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது.
வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் பயனடைவார்கள். தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி , வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டின் மின் கட்டண உயர்வின் படி தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிற வகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?