கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் சாகசப் பயணங்கள் மேற்கொண்டு, அவற்றை யூடியூப்பில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அவரது வீடியோக்களை பார்த்த இளம் வயதினர் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பின் தொடர்ந்தனர். டிடிஎப் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வந்ததால், அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தடையை வலியுறுத்தி டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, இது தொடர்பாக உரிய அதிகாரிகளை அணுக வேண்டும் எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Read more: உங்க இதயம் எப்பவும் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகள் உங்க மெனுவில் இருக்க வேண்டும்!