தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்கள் தொடர்பான புதிய அறிவுறுத்தல் ஒன்று கடும் விவாதத்திற்கு வழிவகுத்தது. கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளுக்கு, விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்க சிபில் ஸ்கோர் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று முன்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிவுறுத்தல் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில், பல விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் பற்றிய புரிதலும், அதை மேம்படுத்தும் வாய்ப்பும் இல்லை என்பதுடன், இத்தகைய கட்டுப்பாடுகள் அவர்கள் கடன் பெறும் உரிமையை மறுக்கும் நிலையை உருவாக்கும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து பல அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக, தமிழக அரசு மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகம் தங்களது நிலையை மாற்றிக் கொண்டு, பழைய நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர்க்கடன் வழங்கப்படும் என்று எந்த இடத்திலும் கட்டாயம் இல்லை என்றும், இது கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கே பயன்படுத்தப்படும் ஒரு தகவல் கருவி மட்டுமே என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கிய முறைமைகளை தற்போதும் தொடர மாவட்டத்திற்குள் உள்ள மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பியுள்ளது.
விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் பொதுமக்கள் உணர்வை கருத்தில் கொண்டு, சிபில் ஸ்கோர் அடிப்படையை விலக்கி, பழைய நடைமுறைகளை பின்பற்ற தமிழக அரசு எடுத்துள்ள முடிவு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியதாகும். இது அவர்களின் வாழ்க்கை வாழ்வதற்கான அடிப்படை ஆதரவாக திகழும்.
Read more: மக்களே உஷார்..! இதை செய்ய தவறினால் உங்க ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்…!