தமிழகத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது. தூண் தளம் (Stilt) மற்றும் இரண்டு தளம் கொண்ட, அதிகபட்சம் 10 மீட்டர் உயரம் வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும், இணையவழியில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சுயசான்று முறையில் இரண்டு மாடி வரை கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி பெற, http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், கட்டிட வரைபட அனுமதி உடனடியாக வழங்கப்படும் என டிடிசிபி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்களை கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், டிடிசிபி, சென்னை சிஎம்டிஏ ஆகியவை கட்டிட அனுமதியை வழங்குகின்றன. ஆனால், அனுமதி வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அனைத்து சேவைகளும் இணையவழி முறையில் வழங்கப்படும் நிலையில், கட்டட அனுமதியையும் ஆன்லைனில் பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகபட்சம் 2,500 சதுர அடி நிலப்பரப்பில், 3,500 சதுர அடி வரை கட்டப்படும் தரைத் தளம் + முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு இணையவழி சுயசான்று அடிப்படையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, வாகன நிறுத்த வசதி (Stilt Floor) கொண்ட, தூண் தளம் + இரண்டு தளம், 10 மீட்டர் உயரம் வரை உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் இன்று முதல் உடனடி ஆன்லைன் அனுமதி வழங்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.