வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 8 கோடிக்கும் அதிகமான பிஎஃப் உறுப்பினர்கள் பெரும் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறைப்படி, பணம் தேவைப்படும் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கோரிக்கை (Claim) சமர்ப்பித்து, அது அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னரே வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். ஆனால், புதிய முறையில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடி (UPI ID) மற்றும் பாதுகாப்பான ‘யுபிஐ பின்’ (UPI PIN) பயன்படுத்தி, தகுதியான தொகையை உறுப்பினர்களே நேரடியாகத் தங்கள் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். இது பணப் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிர்வாக ரீதியாகவும் இந்த மாற்றம் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பணப்பரிமாற்றக் கோரிக்கைகளை பிஎஃப் அலுவலகம் கையாண்டு வருகிறது. இது அந்தத் துறைக்கு மிகப்பெரிய நிர்வாகப் பணிச் சுமையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நேரடி பணப்பரிமாற்ற முறை அமலுக்கு வந்தால், ஊழியர்களின் தலையீடு இன்றி தானியங்கி முறையில் பணிகள் நடைபெறும். இதற்காக பிஎஃப் அலுவலகம் தனது மென்பொருள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
“பிஎஃப் அமைப்பை ஒரு வங்கிக்கு இணையான அதிநவீன சேவை அமைப்பாக மாற்றுவதே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்துள்ள தொழிலாளர் அமைச்சக அதிகாரி, இந்த யுபிஐ வசதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மாற்றப்படும் தொகையை உறுப்பினர்கள் உடனடியாக டிஜிட்டல் முறையிலோ அல்லது ஏடிஎம் (ATM) மூலமாகப் பணமாகவோ எடுத்துக் கொள்ளும் வசதி இருப்பதால், அவசரத் தேவைக்கு பிஎஃப் பணத்தை நம்பியிருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
Read More : LIC திட்டங்களில் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..? எதற்காக இது சிறந்தது..? உண்மை இதோ..!!



