சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் என்று கூறப்பட்டது.. எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பொது இடங்களில் “எண்ணெய் மற்றும் சர்க்கரை பலகைகளை” வைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த பலகை பொதுவாக சிற்றுண்டிகளில் எவ்வளவு கொழுப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளது என்பதைக் காண்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரபலமான உணவுகளில் மறைக்கப்பட்ட கலோரிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். இந்த எச்சரிக்கைகள் நினைவூட்டல்களாக செயல்படும் என்றும், குறிப்பாக இதுபோன்ற பொருட்கள் அடிக்கடி உட்கொள்ளப்படும் இடங்களில், சிறந்த உணவுத் தேர்வுகளைச் செய்ய உதவும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இன்று சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் “பல்வேறு உணவுப் பொருட்களில் மறைக்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரையின் தீங்கு விளைவிக்கும் நுகர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த , கேன்டீன்கள், சிற்றுண்டிச்சாலைகள், கூட்ட அறைகள் போன்ற பல்வேறு பணியிடங்களில் போர்டுகளை காட்சிப்படுத்துவதற்கான ஆலோசனை மட்டுமே வெளியிடப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
சமோசா மற்றும் ஜிலேபிகளில் எச்சரிக்கை லேபிள்கள் பற்றி வெளியான தகவல்கள் தவறானவை, ஆதாரமற்றவை.. வேலை செய்யும் இடங்களில் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு முன்முயற்சியாக போர்டுகளை வைக்க மத்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டது. நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவது குறித்த தினசரி நினைவூட்டல்களாகச் செயல்படுவதே இதன் நோக்கம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.. இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு..