அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வர வேண்டும் என்ற இபிஎஸ்-ந் அழைப்பை நிராகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். திருச்சியில் விசிக மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் நடுவதற்கு அனுமதி தர முடியாது என்று தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டும் அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா..? சிந்தித்துப் பாருங்கள். அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் எங்கள் கூட்டணியில் சேர்கின்றவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்ற கட்சி அதிமுக கட்சி” எனப் பேசினார்.
இதற்கு பதிலளித்த சிபிஎம் பெ.சண்முகம் அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வர வேண்டும் என்ற இபிஎஸ்-ந் அழைப்பை நிராகரித்துள்ளது. நேற்று வரை கம்யூனிஸ்ட்டுகளை காணோம் எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி இன்று அழைப்பு விடுத்திருப்பது ரத்தின கம்பள வரவேற்பு அல்ல.. வஞ்சக வலை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விசிக, இபிஎஸ் அழைப்பை நிராகரித்த நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.