பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (23) என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த நீலகண்டனின் முதுகுத்தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் முதுகு தண்டுவட பிரச்சனையால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி கவிதா கர்ப்பமாக உள்ள நிலையில் அருகில் உள்ள தேவாளயத்திற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நீலகண்டன் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவரை இழந்த துக்கத்தில் கவிதா மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது 6 மாதக் குழந்தையுடன், தனது அண்ணன் கலியபெருமாள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, கணவர் உயிரை முடித்த அதே வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற கவிதா, தற்கொலை செய்த அறைக்குச் சென்று, தன்னையும், தன்னுடைய குழந்தையையும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். ஆனால், பலத்த தீக்காயங்களால் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தையும் உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.