2025 பீகார் சட்டசபை தேர்தல், கடந்த பல தசாப்தங்களில் மாநிலம் கண்ட மிகச் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை அதிக வாக்குப்பதிவு இதுவே முதல் முறை. குறிப்பாக, பெண்களின் பங்குபற்றுதலே இந்தத் தேர்தலின் பெரிய மாற்றக்காரியாக பார்க்கப்படுகிறது.
பீகார் 2025: பெண்களின் வாக்குப்பதிவு
இந்த ஆண்டு பிகாரில் மொத்த வாக்குப்பதிவு 67.13% ஆக இருந்தது.
ஆனால் அதைவிட முக்கியமானது
பெண்கள் வாக்குப்பதிவு: 71.78%
ஆண்கள் வாக்குப்பதிவு: 62.98%
பெண்கள் ஆண்களை விட கிட்டத்தட்ட 9% அதிகம் வாக்களித்துள்ளனர். இது பீகார் தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. பெண்கள் இவ்வளவு அதிக அளவில் வாக்களித்திருப்பது, NDA-க்கு வலுவான முன்னிலை கிடைக்கச் செய்த முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பெண்களின் வாக்கு சதவீதம் இந்த முறை தேர்தல் நிலையை பெரிதாக மாற்றியது.
பல மாவட்டங்களில் பெண்களின் வாக்கு சதவீதம் ஆண்களை விட 10 முதல் 20 புள்ளிகள் வரை அதிகமாக இருந்தது. குறிப்பாக சுபாலில் 20.71 புள்ளிகள் வித்தியாசம் பதிவானது. இதே போன்று கிஷன்கஞ்ச், மதுபனி, கோபால்கஞ்ச், அரேரியா, தர்பங்கா, மதேபுரா ஆகிய மாவட்டங்களிலும் பெண்களின் அதீத ஆர்வம் தெளிவாகப் பதிவானது. கடந்த 15 ஆண்டுகளாகவே பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வந்தாலும், 2025 பெண்களின் சாதனைப் பங்கேற்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆண்டாக அமைந்தது.
ரூ.10,000 நிதி திட்டம் பெண்களிடம் பெரிய தாக்கம்
பெண்கள் பெருமளவில் வாக்களிக்க தூண்டிய முக்கிய காரணங்களில் ஒன்று முதல்வரின் ‘மகிளா ரொழ்கார் யோஜனா’, அதாவது தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம்.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாதி கணக்கெடுப்பு படி, பீகாரில் உள்ள குடும்பங்களில் 34% குடும்பங்கள் மாதம் ரூ.6,000 அல்லது அதற்கு குறைவான வருமானத்தில் வாழ்கின்றன. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிக பின்தங்கிய பிரிவுகளில், ஒரே நேரத்தில் ரூ10,000 கிடைப்பது ஒரு குடும்பத்தின் முழு மாத வருமானத்தை விட அதிகம்.
அதனால் இந்த திட்டம், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்களிடம் மிகப் பெரிய ஆதரவை ஈர்த்தது என்றும், அது வாக்குச் சாய்வில் முக்கிய பங்காற்றியதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதனால், இது ஒரு சாதாரண தேர்தல் வாக்குறுதியாகப் பார்க்கப்படவில்லை; உண்மையான உதவியாகவே உணரப்பட்டது. தினசரி செலவுகளுக்கே போராடும் குடும்பங்களுடன் இத்திட்டம் நேராக இணைந்தது. பல பெண்கள் வாக்காளர்கள், தங்களின் நிலையை உடனடியாக மாற்றி, சிறிதளவு சுயநிறைவை கொடுக்கக்கூடிய ஒன்றாக இந்த உதவித் தொகையை உணர்ந்தனர்.
மதுவிலக்கு
பல ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்ட மதுபானத் தடை, இன்னும் வாக்காளர்களின் நடத்தையைப் பெரிதும் பாதிக்கிறது, குறிப்பாக பெண்களின் வாக்கில். பல பெண்கள், இந்தத் தடை வீட்டினுள் நடைபெறும் குடும்ப வன்முறையை குறைத்ததாக நம்புகிறார்கள். வீட்டுச் செலவில் பணச் சேமிப்பு ஏற்பட்டதுடன், வாழ்க்கைத் தரமும் மேம்பட்டது. சட்டவிரோத மது இன்னும் ஒரு சவாலாக இருந்தாலும், மதுவிலக்கு என்ற கொள்கை NDA-வுக்குப் பலமான ஆதரவாகவே செயல்படுகிறது. பெரும்பாலான பெண்கள் வாக்காளர்களுக்கு, இந்தத் தடை ஆட்சிக்கு ஆதரவு அளிக்கத் தோன்றும் மிகப் பெரிய காரணங்களிலொன்றாக உள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – பெண்களின் வாக்குக்கு பெரிய தாக்கம்
இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட Special Intensive Revision (SIR) எதிர்பாராத விதமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெண்களின் விகிதம் குறைந்தது — 2024 லோக்சபா தேர்தலில் 1,000 ஆண்களுக்கு 907 பெண்கள் இருந்தது; அது 892 ஆகக் குறைந்தது. இதனால் 5.7 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனப் புரிந்தது.
18–29 வயதுள்ள பல இளம் பெண்கள் “permanently shifted” என்று குறிக்கப்பட்டதால் அவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன. இதை எதிர்க்கட்சிகள் “வாக்கு திருட்டு (vote theft) என்றும், பெண்களுடைய பெயர்களை நோக்கமாக அகற்றுவதாகவும் குற்றம் சாட்டின.
ஆனால், இது பெண்களைப் பெரிதாகத் தளர வைக்காமல், மேலும் உற்சாகப்படுத்தியது. பல பெண்கள், தங்களின் பெயர் பட்டியலில் இருக்கிறதா என இரண்டு முறை சரிபாரித்தனர், பிற பெண்களுக்கும் பெயர் சரிபார்க்க உதவினர்..
1.80 லட்சம் ஜீவிகா தீதி பெண்கள்
இந்த திருத்தத்திற்குப் பிறகு, 18–19 வயதுள்ள 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் முதல் முறையாக வாக்களித்தவர்கள்; அரசியல் சார்புகள் அதிகம் இல்லாதவர்கள். தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 1.80 லட்சம் ஜீவிகா தீதி பெண்களை (Jeevika Didis) பணியில் ஈடுபடுத்தியது.
வாக்காளர்களுக்கு தகவல் வழங்குதல், வாக்குச்சாவடி விவரங்களைச் சொல்லுதல், படிவங்கள், செயல்முறைகள் வழிநடத்துதல். இது பெண்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வாக்களித்த இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.



