மீன்கள், இயற்கையின் ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்குகின்றன. அவற்றில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மீன்களின் பங்கு முக்கியமானது.
இதன் காரணமாக, உணவுக் கட்டமைப்பில் மீன்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சேர்க்கப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மீன்கள் பல வகை கொண்டவையாக இருப்பதால், அவற்றின் வாழ்விடம், உணவு சங்கிலி ஆகியவற்றைப் பொருத்து ஒவ்வொன்றும் வெவ்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகின்றன.
எனவே, உணவில் சேர்க்கப்படும் மீன்களின் வகையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெரிய மீன்கள், தங்கள் வாழ்க்கைக் காலத்தில் அதிக அளவு மெர்குரி மற்றும் பிற உலோகங்களை உறிஞ்சி சேமிக்கும் தன்மையுடையவை. இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.
சூரை மீன் : வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக உள்ளது. ஆனால் பெரிய வகைகள் (அல்பாகோர், யெல்லோஃபின்) சிறிய இனங்களைவிட (ஸ்கிப்ஜாக் போன்றவை) அதிக மெர்குரி அளவை கொண்டுள்ளன. எனவே, பெரிய சூரை மீனை வாரத்திற்கு ஒரு அல்லது இரு முறை மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்ணை மீன் : பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களாகக் காணப்படும் கெண்டை மற்றும் கெளுத்தி மீன்களின் தரம், அவை வளர்க்கப்படும் முறைகள் மற்றும் சப்ளையர்களின் தரநிலைகளைக் கருத்தில் கொண்டு மாறுபடும். நன்கு கட்டுப்படுத்தப்படும் பண்ணைகளில் இருந்து பெறப்படும் மீன்கள், உணவுப் பாதுகாப்பு தரங்களை பின்பற்றுவதால், அவை பொதுவாக நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன. இருப்பினும், ஒமேகா-3 அளவில் இயற்கை மீன்களைவிட இவை சிறிது குறைவாகவே இருக்கலாம்.
மத்தி மீன் : மிகவும் பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து கொண்டவை. குறைந்த மெர்குரி அளவு கொண்ட இவை, ஒமேகா-3, புரதம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாக விளங்குகின்றன. அத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த மீன் வகையாகவும் மத்தி கருதப்படுகிறது. இவை பெரும்பாலும் இயற்கையான முறையில் வளரும்.
கானாங்கெளுத்தி மீன்கள் : இந்த வகை மீன்கள், குறிப்பாக அட்லாண்டிக் வகைகள், ஒமேகா-3 மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. ஆனால், கிங் வகை கானாங்கெளுத்திகளில் மெர்குரி அளவு உயரும். எனவே, அவற்றின் நுகர்வை வரையறுக்க வேண்டியது அவசியம்.