மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு செயல்முறையில் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என CBSE தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலும், வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளிலும், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை CBSE நடத்துகிறது. சுமார் 46 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்…
2026ஆம் ஆண்டிலிருந்து 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடைபெறும். ஆனால், 10ஆம் வகுப்பு விடைத்தாள்களின் மதிப்பீடு, முன்புபோல் காகித வடிவிலேயே தொடரும் என CBSE தெளிவுபடுத்தியுள்ளது.
On-Screen Marking முறையின் நன்மைகள்
பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், CBSE தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பாரத்வாஜ் இந்த புதிய முறையின் பல நன்மைகளை பட்டியலிட்டுள்ளார்.
அதில், மொத்த மதிப்பெண் கணக்கீட்டில் ஏற்படும் பிழைகள் முழுமையாக நீக்கப்படும், தானியங்கி ஒருங்கிணைப்பு மூலம் கைமுறை தலையீடு குறைக்கப்படும், மேலும் அதிக ஆசிரியர்கள் பங்கேற்பதன் மூலம் வேகமான மதிப்பீடு சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விடைத்தாள்களை இடமாற்றம் செய்வதற்கான நேரமும் செலவும் பெரிதும் சேமிக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கொண்டே மதிப்பீட்டில் பங்கேற்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் தினசரி பாடப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மதிப்பெண்கள் சரிபார்ப்பு (post-result verification) தேவையில்லை என்றும், அதற்காக பயன்படுத்தப்படும் மனிதவளத் தேவை குறையும் என்றும் CBSE தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து இணைப்பு பெற்ற பள்ளிகளும் மதிப்பீட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து CBSE பள்ளி ஆசிரியர்களும் இதில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முறை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, நிலைத்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப ஏற்பாடுகள்
இந்த மாற்றத்திற்காக, பள்ளிகள் தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என CBSE அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, Public Static IP வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், Windows Operating System 8 அல்லது அதற்கு மேல், குறைந்தது 4 GB RAM கொண்ட கணினிகள், புதுப்பிக்கப்பட்ட வெப் பிரவுசர்கள் (web browsers), Adobe Reader, நம்பகமான இணைய இணைப்பு (குறைந்தது 2 Mbps), தடையற்ற மின்சார விநியோகம் (UPS) ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.
CBSE வழங்கும் ஆதரவு
இந்த புதிய முறைக்கு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் தயார்படுத்த, CBSE முழு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. OASIS (Online Affiliated School Information System) ID கொண்ட ஆசிரியர்கள், இந்த OSM முறையை அணுகி கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பல கட்ட பயிற்சி முயற்சிகள் (dry runs), பயிற்சி முகாம்கள், பிரச்சினைகளுக்கான உதவி மையம் (call centre), மற்றும் வழிகாட்டும் வீடியோக்கள் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்டத்திற்குமான விரிவான வழிமுறைகள் தனித்தனியாக வெளியிடப்படும், இதன் மூலம் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் காலதாமதமின்றி செயல்பட முடியும் என CBSE தெரிவித்துள்ளது.



