இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் இந்திய கடற்படை கவனமாக கண்காணித்து வருவதாகவும், அதில் சீனக் கப்பல்களும் உள்ளதாகவும், எந்தவித சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று தெரிவித்துள்ளார். இது, பீஜிங் சார்பில் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் ராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறியாகும்..
தொடர்ந்து பேசிய அவர் “தற்போது இந்திய கடற்படையில் சுமார் 40 கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை 50-ஐத் தாண்டும் வகையில் அதிகரிக்கப்படும்,” என்றார்.
அவர் 2026 பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கடற்படை அணிவகுப்பு (International Fleet Review) குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு சக்திகளின் இருப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த நிலைமை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த நேரத்திலும் குறைந்தது 40 கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன; இதை மேலும் அதிகரிக்கப் போகிறோம்,” என அவர் கூறினார்.
இந்தக் கருத்துகள், சமீபத்தில் சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அதிகமாகச் சுற்றி வருவதாகவும், சில மொரீஷியஸை நோக்கிச் செல்வதாகவும் தகவல் வெளியான நிலையில் வந்துள்ளன.
“ஒவ்வொரு கப்பலையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம் — அவை எப்போது நுழைகின்றன, என்ன செய்கின்றன, எப்போது வெளியேறுகின்றன என்பதையும் கவனித்து வருகிறோம். சவால்கள் இருப்பினும், உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதை இந்தியப் பெருங்கடல் என்பதில் மாற்றமில்லை,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், “எந்தவித சூழ்நிலைக்கும் எதிர்கொள்ள கடற்படைக்கு தேவையான அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் இது தொடரும். எங்களது ராணுவத் திட்டங்கள் தடையின்றி செயல்படுகின்றன,” என்றார்.
“நாங்கள் தற்போது தயாராகவும், விரைவாக பதிலளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறோம். இது எங்களது வெளிநாட்டு கடற்படை பயிற்சிகளின் வழியாகவும் தெளிவாகக் காட்டப்படுகிறது,” என அவர் மேலும் கூறினார்.
2026ல் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை அணிவகுப்பு
இந்திய கடற்படை 2026 பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை அணிவகுப்பை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18ஆம் தேதி கடற்படை அணிவகுப்பை மதிப்பாய்வு செய்வார். இந்நிகழ்வில், இந்தியாவின் சொந்த தயாரிப்பான INS விக்ராந்த் விமானவாய்க் கப்பலும், கல்வரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களும் முதல் முறையாக பங்கேற்கின்றன.



