கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. மன்னார்க்காடு அருகே உள்ள குமரம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரிந்தல் மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சனிக்கிழமை (ஜூலை 12) இரவு அவர் உயிரிழந்ததும், அவரது மாதிரிகள் புனேவை சேர்ந்த தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டன. பரிசோதனையில், அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்த 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிபா வைரஸ் பரவல் பற்றிய அச்சத்தை போக்க, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
குமரம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், பழம் உண்ணும் வௌவால்களிடமிருந்து பரவும் ஆபத்தைத் தவிர்க்க அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) வெளியிட்ட அறிக்கையில், “நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் முழுமையாக செயல்படுகின்றனர். பாதை வரைபடங்கள், தொடர்பு பட்டியல்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. NIV-யிடமிருந்து உறுதிப்படுத்தல் வந்தவுடன் அதனை மக்கள் தெரிந்துகொள்ள வழி செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
தற்போது பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் தற்காலிகமாக சுகாதார கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனை அணுக வேண்டும். பழங்கள் மற்றும் பழச்சாறுகளை நன்கு கழுவி உபயோகிக்கவும். வௌவால்கள் உணவுகளை அணுகாதவாரு பாதுகாக்க வேண்டும். அவசியமின்றி மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள தவிர்க்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
Read more: AI மூலம் ஆபாச வீடியோ.. இணையத்தில் வெளியிட்டு வருமானம் ஈட்டிய இளைஞன் கைது..!!