நில அளவு விவரங்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவுகள் நிறைவேறாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகி வருகிறது. இது பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் தேவையற்ற நேர தாமதத்தை உருவாக்கி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில், மாநில அரசால் சார் பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வீடு, மனை விற்பனைக்கான கிரய பத்திரங்களை, சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன் ஆன்லைன் முறையில் ஒப்பிட்டு சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, ‘தமிழ்நிலம்’ மற்றும் ‘ஸ்டார் 2.0’ என்ற சாப்ட்வேர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த செயலியில், கிராம வரைபடங்கள், நில விவரங்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பாம்பு படிவங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் காணலாம். பட்டாவில் உள்ள அளவுக்கு ஏற்ப பத்திரத்தில் விவரங்கள் ஒரே போல இருந்தால்தான் டோக்கன் கிடைக்கும்.
பட்டா அளவும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நில அளவும் மாறுபட்டால், பதிவாளர்கள் பத்திரங்களை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பலாம். ஆனால், தற்போது வந்துள்ள புதிய உத்தரவின் அடிப்படையில், சார் பதிவாளர்கள் தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பட்டா அளவைப் பொருத்து, பத்திரத்தில் சொத்து விவரங்கள் பகுதியில் திருத்தம் செய்து பதிவு செய்ய பரிந்துரை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில அளவு விவரங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டால், பட்டாவிலுள்ள அளவை அடிப்படையாகக் கொண்டு, பத்திரங்களில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர் ஒப்புதல் பெற்ற பின் பதிவு செய்யலாம். இதனால், பத்திரப்பதிவு தடைப்படும் நிலைமையை தவிர்க்கலாம்.
மேலும், நில அளவை தொடர்பான பிழைகள் வராதபடி, நிலம் ஒதுக்கீடு, உட்பிரிவு போன்ற பணிகளில் துல்லிய தரம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. நிலத்துக்கான சர்வே எண்கள் மற்றும் அவை தொடர்பான எல்லை விவரங்களைச் சரியாகத் தருவது அவசியம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், பத்திரப்பதிவில் ஏற்படும் நில அளவுப் பிழைகளைத் தடுக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
Read more: பேசாமல் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்..!! – பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்