அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முக்கிய அமைப்புகள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்திய நகரமும் ஒரு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை (CISO) நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஒவ்வொரு இந்திய நகரத்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) இருக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தினார். அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உள்ளூர் தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு இந்த அதிகாரிகள் பொறுப்பாவார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், பெண்களின் அனுமதியின்றி ஆன்லைனில் பதிவேற்றப்படும் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் CISO-களை நியமிக்க திட்டம் இருக்கிறது என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. கடந்த 15ம் தேதி வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது, பெண்களின் அனுமதியின்றி இணையத்தில் வெளியிடப்படும் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான மீடியா உள்ளடக்கங்கள் (non-consensual intimate media) தொடர்பாக அதிகரித்து வரும் பிரச்சனைக்கு எதிராக, ஒரு உறுதியான அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒரு பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தனது முன்னாள் காதலன், தனது தனிப்பட்ட வீடியோக்களை மறைமுகமாக பதிவு செய்து, ஆபாச வலைதளங்கல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனால், தான் தீவிர மனவேதனைக்கு ஆளாகி விட்டதாகவும், இந்த வீடியோக்களை இணையத்திலிருந்து அகற்றவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், மூத்த வழக்கறிஞர் குமரகுரு மூலம், கடந்த 22ம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்தது. அதாவது, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோஹன் கடந்த வாரங்களில், ஒவ்வொரு இந்திய நகரத்திலும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக வழக்கறிஞர் குமரகுரு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
CISO-க்களின் பொறுப்புகள் என்ன? இந்த அதிகாரிகள், ஆன்லைனில் வருவதைப் போல சைபர் குற்றங்களுக்கு விரைந்து பதிலளிக்கும் பிரிவுகள் மீது நேரடியாக கண்காணிப்பது, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பிறர் உடனடி உதவிக்காக தொடர்பு கொள்ளும் ஹெல்ப்லைன்கள் செயல்பட உறுதி செய்வது. சமூக ஊடகங்கள், செய்தி செயலிகள், தளங்களில் உள்ள தவறான, அவமதிக்கும், அனுமதியில்லாத உள்ளடக்கங்களை விரைவாக அகற்றுதல். வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகளை நடத்துவார்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வெங்கடேஷ் இந்த முன்மொழிவை வரவேற்றாலும், இத்தகைய சைபர் குற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை தொடர்ந்து கையாளும் அதிகாரிகள் மீது ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்து, அரசும் நீதிமன்றமும் அதை முன்னிட்டு உரிய பாதுகாப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“இது அந்த அதிகாரியின் மனநலத்திற்கு என்ன செய்யும்? காலை முதல் மாலை வரை அவமானகரமான, தவறான உள்ளடக்கங்களை மட்டும் பார்க்கவேண்டும் என்றால், அது அவருடைய மனநலத்தையும் பாதிக்கும். இது, தொடர்ந்து குடும்ப நீதிமன்ற வழக்குகளை கையாளும் நீதிபதிகள் போலவே மனம் உடைந்து விடும் அல்லது உணர்ச்சியற்றதாயும் ஆகிவிடும்,” என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.
மேலும், அத்தகைய புகார்கள் கையாளும் போது ஒரே மாதிரியான நடைமுறையும் (Standard Operating Procedure – SOP) மற்றும் நியாயத்தன்மையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்காக மத்திய அரசுக்கு ஆகஸ்ட் 5 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து ஒரு SOP தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நீக்கப்பட்ட உள்ளடக்கம் மீண்டும் வெளிவராமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் இது கோடிட்டுக் காட்ட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Readmore: பலரும் அறியாத ஆடி அமாவாசை பயன்கள்!. தர்ப்பணம் கொடுப்பவர்கள் கட்டாயம் இதை மறந்துவிடாதீர்கள்!.