அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் இப்போது மீண்டும் கைகோர்த்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்களுடன் சேர்க்கும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷா எடுத்த திட்டம் தோல்வியடைந்துவிட்டது. அமமுக இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. எங்களின் எதிர்கால கூட்டணி நிலைப்பாடு பற்றி டிசம்பரில் அறிவிப்போம்” என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி கூட்டணியில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் இந்த முடிவு, என்டிஏ கூட்டணியில் 2வது விக்கெட் விழுந்தது எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, அமமுக பாஜகவுடனான கூட்டணியில் தொடர்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று தினகரன் வெளியிட்ட அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
முன்னதாக விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதனைப் போல 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். இது TVK கூட்டணிக்கு டிடிவி தினகரன் செல்ல உள்ளதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஓபிஎஸ்-ம் விலகிய நிலையில் செங்கோட்டையனின் நிலைப்பாட்டை பொருத்தும் கூட்டணி கணக்கு மாறும் எனக் கூறப்படுகிறது.
Read more: அடேங்கப்பா!. ரூ.1,100 கோடிக்கு விற்கப்பட்ட நேருவின் பங்களா!. வாங்கியது யார் தெரியுமா?.