பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 -15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை அனைத்துப் பயனாளர்களுக்கும், குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கட்டாய பயோமெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெறவேண்டியது அவசியமானதாகும்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்கள், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களுள் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள். முதன்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது முறை கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பயின்றுவரும் 5 முதல் 7 வயதுக்குட்பட்ட சுமார் 8 இலட்சம் மாணவர்களுக்கும், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 15 இலட்சம் மாணவ மாணவியருக்கு கட்டாய பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.