செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும்.
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாய நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டக் கணக்குகள், முதியோர் உதவி தொகை கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு மானியம் /உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.
தொடக்க காலத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வாரிசுதாரரை நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் மறைவுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மிக எளிதாகவும், விரைவாகவும் வாரிசுதாரர்கள் பெற வகை செய்கிறது. இதன்படி அஞ்சலக வங்கிகளில் உள்ள அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசுதாரரை நியமனம் செய்வதற்கு தேவையான வசதிகள் மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரத்யேக செயலி மூலம் அஞ்சலக வங்கி கணக்குதாரர்கள் வாரிசு நியமனம், மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த செயலி, அஞ்சல்காரரின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சலக வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் மானியத் தொகைகளை எளிதாகப் பெற முடியும். அதுமட்டுமின்றி அஞ்சலக வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
இந்த செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும். பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து முறையே ரூ.555 ரூ.755 பீரிமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வசதியும் இந்த செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.