தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு பரிசாக அவர்களுடைய வாகனங்களின் ‘பாஸ்டேக்’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும். இது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பரிசு திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செல்லும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற, ‘ராஜ்மார்க்யாத்ரா’ செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். அதில், பெயர், எந்த இடத்தில் சுங்கச்சாவடி கழிவறை உள்ளது, தங்கள் வாகனத்தின் பதிவு எண், மொபைல் எண் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். அத்துடன் சுத்தமில்லாத கழிவறை தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் ‘பாஸ்டேக்’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறைமட்டுமே இதை பயன்படுத்த முடியும். இந்த பரிசு தொகையை பணமாகவோ, வேறு யாருக்கோ மாற்ற முடியாது. தேசிய நெடுஞ்சாலை துறை கட்டிய கழிவறைகள், பராமரிக்கும் கழிவறைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.