திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ சந்திப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை தொடரும் வகையில் திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது.
ஒருபுறம் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 110 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் மற்றும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அக்ரிஸ் சோனந்தர் வெளிப்படையாக தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இதே கோரிக்கையை முன்வைத்து இருந்தனர். மறுபுறம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ‘தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. எங்கும் செல்ல மாட்டோம்’ என்று கூறியிருந்தனர். இதில் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 30 இடங்களாவது கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் வெளியேறினால் அதற்கு மாற்றாக பாமகவை உள்ளே இருப்பதற்கான வேலையை திமுக தொடங்கியதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தன. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் திமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் உள்ள ஈஸ்வரன் பாமக நிறுவனர் ராமதாசை நேரடியாக சந்தித்துள்ளார். திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ சந்தித்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறியுள்ளார்.



