தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். மேலும், தாம்பரம் தொகுதி முதன் முதலில் தொடங்கப்பட்டபோது, இவர் திமுக தாம்பரம் மாநகர செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளவும், தான் யார் என்று உனக்கு தெரியுமா? என்று கோபத்தோடு பேசியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தேஜஸ் மொபார்ட்ஸ் நிறுவன CEO கிருஷ்ணமூர்த்தி தாம்பரம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 447- அத்துமீறி நுழைதல், 506(2)- கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.