தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றிய 17 காவல்துறையினர் மட்டுமின்றி ஆணையிட்ட அரசு அதிகாரிகள் என இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ’’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி , தடியடி நடத்தி 14 உயிர்களை பறித்த அதிமுக அரசு பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது : சமூக விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டு , கொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதியை நிலை நாட்டும் விதமாக போராட்டக் களத்தில் நடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்திருந்த அமைய்யார் அருணா ஜெகதீசன் ஆணை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மக்கள் மன்றம் , ஆணையத்தின் முன் நேர் நின்றும் தொடர்ச்சியாக நான் எடுத்துரைத்து வந்தேன்.
ஒரு நபர் ஆணையருக்கு நன்றி : அவற்றை பிரதிபலிப்பது போன்றே, சட்ட மன்றத்தில் முன் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆணையத்தின் அறிக்கை தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரை பழிச் சொல்லை , முழுமையாகப் போக்கி ஆளும் வர்க்கத்தின் கோரப் படுகொலைகளை தோல் உரித்த அம்மையார் அருணா ஜெகதீசன் எனது மனப்பூர்வ பாராட்டுக்கள் மற்றும் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொலைக்கான சாட்சி : ஸ்டெர்லைட்டை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்தப்பட்ட 100வது நாளில் பல கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டம் நடத்தினர். அவர்களை நோக்கி தடி அடி , துப்பாக்கி சூடு நடத்தி அடக்குமுறை ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தொடர்பே இல்லாத ஒரு இடத்தில் ஜான்சி என்பவர் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் ஒருவர் பலி இவை இரண்டும் போது இவை கொலை என்பதற்கான சாட்சி.

குறிபார்த்து சுட்டுள்ளனர் :காவல் துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப் பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோக்கமே கொலைக்காகத்தான் : துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அம்மையார் அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும்.
பரிந்துரையை ஏற்கவேண்டும் : நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.