தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுகவை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வரும் 22-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
தேர்தல் கள நிலவரங்கள், தோல்விக்கான காரணங்கள் மற்றும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த குழு, விரிவான அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சியின் உள்கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்க தலைமை திட்டமிட்டுள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சரியாகச் செயல்படாத சில மாவட்ட செயலாளர்களின் பொறுப்புகளை மாற்றுவது, பிற கட்சிகளிலிருந்து வந்து இணைந்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்குவது போன்ற அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொடர்ச்சியாக மூன்று முறைக்கு மேல் ஒரே பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகப் பொறுப்புகளுக்கு 60 வயது வரை வரம்பு நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த மாவட்டச் செயலாளர்களுக்குக் கட்சித் தலைமையின் வழிகாட்டுதல் குழு, அரசியல் விவகார குழு அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற உயர் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தல் களத்திற்குப் பின் கட்சியின் எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் வகையில் கூட்டப்படும் முதல் செயற்குழுக் கூட்டம் இது என்பதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read More : சட்டசபையில் ஒலித்த குரல்..!! CM விஜய்யின் அதிரடி முடிவு..!! முதல்முறை MLA-க்களுக்கு கார்..!!


