கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால் (அசெட்டமினோஃபென்) குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்றவற்றிற்காக இந்த மருந்தை நம்புகின்றனர். ஆனால், புதிய ஆராய்ச்சி ஒன்றில், இந்த மருந்து குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளுடன் (NDDகள்) தொடர்பு பெற்றிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மாசசூசெட்ஸ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 46 தனித்தனி ஆய்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. 100,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், 27 ஆய்வுகள், கர்ப்ப காலத்தில் அசெட்டமினோஃபென் எடுத்த பெண்களின் குழந்தைகளில் NDD அபாயம் அதிகம் இருப்பதாக கண்டறிந்தன.
இந்த NDDகளில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD), கவனக்குறைவு/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) போன்றவை அடங்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், அசெட்டமினோஃபென் பிளசென்டா தடையைக் கடந்து கருவிற்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கருவில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தூண்டலாம், ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கலாம், மேலும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் எபிஜெனெடிக் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதுவே குழந்தைகளில் ADHD மற்றும் ASD போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
2017ஆம் ஆண்டு வெளியான ஆய்வில், 22–28 நாட்கள் தொடர்ச்சியாக பாராசிட்டமால் எடுத்த கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளில் ADHD அபாயம் அதிகரித்தது என கண்டறியப்பட்டது. பிப்ரவரி 2025ல் வெளியான மற்றொரு ஆய்வும் இதையே வலியுறுத்தியது. பொதுவாக, பாராசிட்டமால் “பாதுகாப்பான மருந்து” எனக் கருதப்பட்டாலும், கருவின் நரம்பியல் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.
ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியா ஏ. பக்கரெல்லி கூறியதாவது: “கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியைப் பாதுகாக்க அசெட்டமினோஃபென் நுகர்வை குறைக்க வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், அபாயங்களை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை.” என்றார்.